திமுகவினருக்கு பயந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சுயேட்சை கவுன்சிலர்

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில், திமுகவினருக்கு பயந்து, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் ஒருவர், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி ஊராட்சியின் 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அரவிந்த் என்பவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரை தவிர, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மீதமுள்ள 15 இடங்களில், அதிமுக 9 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் இன்று செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றனர். அப்போது, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அரவிந்த்தை கடத்த திமுக-வினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் பரவியது. இதை கேள்விப்பட்ட சுயேட்சை கவுன்சிலர் அரவிந்த், பதவியேற்பு முடிந்ததும் சுவர் ஏறிக்குதித்து தப்பி ஓடினார். உடன் வந்தவர்கள் அரவிந்தை காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்தனர். திமுகவினருக்கு பயந்து சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கன்னியாகுமரியில், மேற்கு மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல் வெடித்தது. தேமுதிக மாவட்ட செயலாளராக இருந்து திமுகவில் இணைந்த ஜெகநாதன், திருவட்டார் ஒன்றியத்தின் 10வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றார். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பத்மநாதபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், மற்றும் ஜெகநாதன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்லில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் அவர்களுக்குள் இப்படி பல இடங்களில் சண்டையிட்டுக் கொள்வது  மக்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version