வேலூர் மக்களவை தேர்தலில், திமுக வேட்பாளரை எதிர்த்து காங்கிரஸ் பிரமுகர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது, திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் தொகுதி மக்களவை தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பு மனு தாக்கல் கடந்த 11ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் பிரமுகர் வாலாஜா அசேன், வேலூரில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே திமுகவில் இருந்தபோது, கடந்த 1989 ம் ஆண்டு, சுயேச்சையாக ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். 2007-ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
ஏற்கனவே வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்ட போது திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியரிடம், அசேன் மனு அளித்திருந்தார். இந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட களமிறங்கி இருப்பது, திமுக-காங்கிரஸ் கூட்டணி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.