திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் வாக்கு சேகரிக்க சென்ற தினகரன் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளரை அப்பகுதி மக்கள் விரட்டியடித்தனர். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் தினகரன் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக ஜோதி முருகன் போட்டியிடுகிறார். தமிழக வேளாளர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய அவர், மக்களவை தேர்தலில் தினகரனின் ஆதரவு பெற்று போட்டியிடுகிறார். இவர் முன்னதாக பள்ளர் உள்ளிட்ட ஆறு சமூகத்தை சேர்ந்த மக்களை தேவேந்திரகுல வேளாளர் பட்டியலில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் மேற்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அவரை சூழ்ந்த அப்பகுதி மக்கள், தங்கள் சமுதாயத்திற்கு எதிராக மனு கொடுத்து விட்டு தற்போது வாக்கு சேகரிக்க வந்தது ஏன் என சரமாரியாக கேள்வி எழுப்பினர். வாகனத்தை வழிமறித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால், பிரசாரம் செய்ய முடியாமல் ஜோதி முருகன் திரும்பிச் சென்றார்.