நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டெல்லி போர் நினைவுச்சினத்தில், குடியரசுத் தலைவர் ராமநாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவனே, கப்பற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதூரியா ஆகியோரும் போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் தங்களது இல்லங்களில், மூவர்ணக் கொடியேற்றினர்.

டெல்லி தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், விழாவில் பேசிய அவர், டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வந்த நிலையில், 25 சதவீத மாசு குறைய உதவிய நகரம் டெல்லிதான் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழாவின் போது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது மாவட்ட ஆட்சியர் ராமன் தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொரோனா காலத்தில் முன்களப்பணியாளர்களாக சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் காவல் துறை அலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 57 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

 

கடலூர் மாவட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவின் போது மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமூரி தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து கொரோனா தொற்றினால் உயிர் இழந்த விருத்தாச்சலம் வட்டாட்சியரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியர், முன்கள பணியாளர்கள் 76 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

 

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து காவல் துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 90 பேருக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.

அகழாய்வு பணிகள் நடைபெறும் சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் பாதுகாப்பான முறையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கீழடி அகழாய்வு இயக்குநரும், தமிழகத் தொல்லியல் துறை இணை இயக்குநருமான சிவானந்தம் மூவர்ண கொடியை ஏற்றினார். இதில், அகழாய்வாளர்கள், தொல்லியல் வல்லுநர், ஆய்வு மாணவர்கள், மற்றும் அகழாய்வுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

 

 

 

Exit mobile version