ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் தேதியை, இந்திய விமானப்படை தினமாக கடைபிடித்து வருகிறோம். இந்த நாளில், நமது நாட்டு விமானப்படையின் வரலாறு குறித்தும், அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் தெரிந்துக்கொள்வோம்.
இந்தியப் பாதுகாப்பு படைகளின் ஒரு அங்கமே விமானப் படை. 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி, பிரிட்டிஷ் ராயல் விமானப் படையின் ஒரு பிரிவாக, இந்திய விமானப்படை தொடங்கப்பட்டது. 1933-ஆம் ஆண்டில், நான்கு வெஸ்ட்லாண்ட் வாபிடி (WESTLAND WAPITI) விமானங்கள் மற்றும் ஐந்து விமானிகளுடன் தொடங்கியது, நமது விமானப்படை. இரண்டாம் உலகப்போரின் போது இந்திய விமானப்படை, பர்மாவில் ஐப்பானின் முன்னேற்றத்தை தடுக்க முக்கிய கருவியாகப் செயல்பட்டது.
சுதந்திரத்திற்கு பின்னர், இந்திய விமானப்படையில் படிப்படியாக புதிய விமானங்கள் இணைக்கப்பட்டன. அமெரிக்க தயாரிப்பான VULTEE VENGEANCE, DOUGLAS DC-3 மற்றும் பிரிட்டிஷ் தயாரிப்பான HAWKER HURRICANE, SUPERMARINE SPITFIRE மற்றும் WESTLAND LYSANDER போன்ற விமானங்கள் படையின் வலிமையை கூட்டின. பின்னர் வந்த MIG-29, HAL TEJAS, MIRAGE 2000, SUKHOI SU-30 உள்ளிட்ட MULTI-ROLE COMBAT போர் விமானங்கள் இந்திய விமானப்படையை விரிவுப்படுத்தியது. கடந்த மாதம் இணைக்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பலத்தை பன் மடங்கு அதிகரித்துள்ளது. பிரான்சில் உருவாக்கப்பட்ட ரபேல் போர் விமானம், 2 ஆயிரத்து 450 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கக்கூடியது. இன்றைய தேதிக்கு உலகின் சக்திமிக்க போர்விமானங்களில் ரபேல் முக்கியமானது.
2016ஆம் ஆண்டு இந்திய அரசின் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் போர் விமானங்களை இயக்கும் பணியில் பெண்களை நியமிக்க முடிவு செய்தது. அதன்படி, மத்தியபிரதேசத்தைச் சேரந்த அவானி சதுர்வேதி, ராஜஸ்தானை சேர்ந்த பாவனா காந்த் ஆகியோருக்கு பயிற்சி பெற்று, போர் விமானங்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.
இத்தனை சிறப்பம்சங்களை கொண்ட இந்திய விமானப்படை, எந்த நேரத்திலும் அச்சுறுத்தல்களை சமாளிக்க தயாராக உள்ளது எனவும், விமானப்படையின் வலிமை மேலும் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார் இந்திய விமானப்படையின் தலைவர் ஆர்.கே.எஸ்.பதாரியா.