பெண்கள் உலக கோப்பை டி20 போட்டி – நியூசிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது

பெண்கள் உலக கோப்பை டி20 போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தானியா பாட்யா, ஸ்மிருதி மாந்தனா ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்ப்ரீத் கவுர் 51 பந்துகளில் 8 சிக்சர் உட்பட 103 ரன்கள் குவித்து, 20 ஓவர் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 194 ரன்களை குவித்தது. பெண்களுக்கான டி20 உலக கோப்பை போட்டியில் பதிவான அதிகபட்ச ரன் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக சுஸி பேட்ஸ் 62 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது இரண்டாவது லீக்கில் பாகிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது.

Exit mobile version