உலககோப்பை கிரிக்கெட் : இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்பில் இந்தியா…

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன. 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற 10 நாடுகளில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இதையடுத்து முதல் அரையிறுதிப் போட்டியில் மான்செஸ்டர் நகரில் நாளை மாலை 3 மணிக்கு இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

லீக் முடிவில் 7 வெற்றி, 1 தோல்வி, 1 முடிவு இல்லை ஆகியவற்றுடன் 15 புள்ளிகள் பெற்று இந்தியா முதலிடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி ‘லீக்’ ஆட்டத்தில் 5 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் 11 புள்ளிகளை பெற்று 4வது இடத்தை பிடித்தது.

இப்போட்டியில் வென்றால் இந்தியா இறுதிப்போட்டிக்கு நுழையும் என்பதால், நாளைய அரை இறுதி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இந்திய அணியின் போட்டிக்குத் தலைமை தாங்கும் விராட்கோலியும், நியூசிலாந்து அணிக்குத் தலைமைத் தாங்கும் வில்லியம்சனும் 10 ஆண்டுகளுக்கு முன்பு, 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக பதவி வகித்து, மீண்டும் தங்கள் நாட்டின் அணிக்காக மோதிக்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version