ஆன்லைன் வர்த்தகத்தில் அதிகரிக்கும் போலிப் பொருட்கள்

ஆன்லைன் வர்த்தகத்தில் போலிப் பொருட்கள் மூலம் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. எப்படி ஏமாற்றப்படுகின்றனர் மக்கள்? ஏமாறாமல் தவிர்ப்பது எப்படி?

ஆன்லைன் வர்த்தகம் சமீப காலங்களில் வாடிக்கையாளர்களின் ஆதரவைப் பெருமளவில் இழந்துள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக, ஆகஸ்ட் 2016-ம் ஆண்டு முதல், மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் மட்டும் 8 ஆயிரத்து 373 புகார்கள் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைனில் பதிவாகியிருக்கின்றன என்பதே இதன் சான்று. இதில் ஸ்னாப்டீல், அமேசான், பிளிப் கார்ட் – போன்ற எந்த பிரபல ஆன்லைன் நிறுவனமும் விதிவிலக்காக இல்லை.
 
ஆன்லைன் வர்த்தகம் சந்தித்துவரும் மிகப் பெரிய சிக்கல் ‘போலிப் பொருட்கள்.’ அதாவது பிராண்டிங் பொருட்களைப் போலவே உருவாக்கப்பட்ட போலியான பொருட்கள். லாஜிக்கல் சர்வே – என்ற ஆய்வு நிறுவனம் கடந்த 2019ஆம் ஆண்டில் ஆன்லைன் வாடிக்கையாளர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களில் 38 சதவிகிதம் பேர் போலியான பொருட்களைப் பெற்று ஏமார்ந்து உள்ளது கண்டறியப்பட்டது, அதாவது ஆன்லைனில் பொருட்களை வாங்குபவர்களில் மூன்றில் ஒருவர் போலியைத்தான் பெறுகின்றார் என்றது இந்த ஆய்வு.
 
கடந்த 2017ஆம் ஆண்டில் எகனாமிக்ஸ் டைம்ஸ் நடத்திய ஒரு ஆய்வில் பங்கேற்ற வாடிக்கையாளர்களில், 12 சதவிகிதம் பேர் ஸ்னாப் டீல் இணையதளம் மூலம் போலியான பொருளைப் பெற்று ஏமாந்ததாகவும் , 11 சதவிகிதம் பேர் அமேசான் தளத்தில் போலியான பொருளைப் பெற்றதாகவும், 6 சதவிகிதம் பேர் பிளிப்கார்ட் தளத்தில் போலியான பொருளைப் பெற்றதாகவும் கூறியதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியது.
 
மேலும் அதே 2017ஆம் ஆண்டில் வெளியான ரெட்சீர் நிறுவனத்தின் ஆய்வு, இந்தியாவில் போலியான பொருட்களை வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்புவதால் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 3.4 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது. இது 24 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இணையான தொகை ஆகும்.
 
ஆன்லைன் விற்பனைத் தளங்களில் அதிக தள்ளுபடிக்கு பொருட்களை வாங்குபவர்களே இது போன்ற மோசடிகளுக்கு பெரிதும் இலக்காகின்றனர். வாசனை திரவியங்கள் முதல் ஷூக்கள் வரை அனைத்துப் பொருட்களிலும் முன்னணி பிராண்டுகளின் போலிகள் இவர்களைக் குறிவைத்தே தயாரிக்கப்படுகின்றன.
 
இந்த மோசடிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க, வாரண்டி உள்ள, ரிட்டர்ன் வசதி உள்ள பொருட்களை மட்டுமே வாங்குவது அவசியம். கேஷ் ஆன் டெலிவரியில் வாங்கினால் அது இன்னும் சிறந்தது. அதிக தள்ளுபடி உள்ள பொருட்களை வாங்கும் போது, அவற்றின் வேறு புகைப்படங்களைப் பார்த்து, ஒப்பிட்டு உண்மையான பொருளா என்று சரி பார்ப்பதும் அவசியம் – என்கின்றனர் நிபுணர்கள்.

முன்னறிமுகமோ தேவையோ இல்லாத பொருட்களை, அவை அதிக தள்ளுபடியில் கிடைக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக வாங்குவது தவறு, அப்போதுதான் பெரிய மோசடிகள் நடக்கின்றன – என்பது இவர்களின் ஆலோசனை.

Exit mobile version