அதிகரிக்கும் எலக்ட்ரானிக் குப்பைகள்: தரம் பிரிக்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி தீவிரம்

எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை முறையாக அப்புறப்படுத்தாதால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க எலக்ட்ரானிக் குப்பைகளையும் தரம்பிரித்து வாங்கும் நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி இறங்கியுள்ளது.

மக்கள் தொகை அடர்த்தியில் முதலிடம் வகிக்கும் சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது. மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் எப்படி மண்வளத்தையும், நிலத்தடி நீரின் தன்மையையும் பாதித்து விடுமோ, அதேபோல் தான் மின்னணு குப்பைகளும்.
இன்றைய காலகட்டத்தில் மின்னணு பொருட்களின் பயன்பாடு அசூர வளர்ச்சி பெற்றுள்ளது.மக்களின் உடல் உழைப்பு குறைய இந்த மின்னனு பயன்பாடு முக்கிய காரணம். டிவி, பிரிட்ஜ், மாவு அரைக்கும் இயந்திரத்தில் தொடங்கி செல்லிடப்பேசி, மலிவான விலையில் கிடைக்கும் வகை வகையான கை கடிகாரங்கள் என மின்னணு பொருட்கள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்துவிட்டது. விதவிதமான மின்னணு பொருட்களை பயன்படுத்த ஆர்வம் காட்டும் மக்கள், அவை வீணானவுடன் முறையாக மறுசுழற்சி செய்வதில்லை.

இந்நிலையில் சென்னை முழுவதும் பயன்படுத்தி வெளியேற்றப்படும், மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து மறு சுழற்சி செய்து வருகிறது சென்னை மாநகராட்சி. நாளொன்றுக்கு சுமார் 4,500 டன் குப்பையும், சுமார் 700 டன் கட்டட கழிவுகளும் இதில் அடங்கும். இந்த நிலையில் மக்கள் பயன்பாட்டில் அதிகரித்திருக்கும் எலக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டு, வீணாகும் எலக்ட்ரானிக் குப்பைகளையும் பிரித்து வாங்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதன்முறையாக அடையாறு மண்டலத்தில் எலக்ட்ரானிக் குப்பைகளை வாங்கும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக சென்னை மாநகாரட்சி தெற்கு இணை ஆணையர் ஆல்பி ஜான் கூறுகிறார் .

இத்திட்டத்தின் கீழ் கடந்த 15 நாளில் மட்டும் அடையாறு மண்டலத்துகுட்பட்ட இடங்களில் இருந்து சுமார் 3 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் வாங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் இந்த புதிய முயற்சிக்கு சூற்றுச் சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version