நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீட்டில் உச்சக்கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். ஒரு மாநகராட்சி இடத்தைக் கூட தர திமுக தயாராக இல்லை என்பதால் மனம் வெதும்பி கிடக்கின்றனராம் கூட்டணிக் கட்சியினர்.
முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டது. அப்போது நீதிமன்றத்திற்கு சென்று தடையாணை பெற்று அதற்கு முட்டுக்கட்டை போட்டது திமுக.
தற்போது ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்தது. மீண்டுமொருமுறை நீதிமன்றத்தின் குட்டுக்கு ஆளாகி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது திமுக அரசு.
இந்த சூழ்நிலையில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நீடித்த அந்த கூட்டணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் உடையும் சூழல் உருவாகி உள்ளதாம்.
அதாவது மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றைக்கூட கூட்டணிக் கட்சிகளுக்கு தர திமுக தலைமை விரும்பவில்லையாம்.
பேச்சுவார்த்தைக்கு வந்த கட்சிகளுக்கு வெறுங்கையை பரிசாக தந்துள்ளதாம். குறிப்பாக காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட்களும் தாங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளின் மாநகராட்சிகளை கேட்டதற்கு, திமுக மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
10 ஆயிரம் வார்டு கவுன்சிலர்களுக்கு குறையாமல் திமுகவினர் நிற்க வேண்டும் என்றும், கூட்டணிக் கட்சிகளுக்கு எஞ்சிய 2 ஆயிரத்து சொச்சம் இடங்களை பிரித்துக் கொடுத்தால் போதுமானது என்றும் மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனராம்.
பொங்கல் சிறப்பு தொகுப்பு குளறுபடிகள், வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அதிகரித்துள்ள சட்டம் – ஒழுங்கு சிக்கல் போன்றவற்றால் பொதுமக்களை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தடுமாறி வரும் திமுக, கூட்டணிக் கட்சியினரையும் கையாள முடியாமல் திணறுவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.