கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என முதன்முதலில் ஆஸ்திரேலியாதான் கோரிக்கை விடுத்தது. இதனால், ஆஸ்திரேலியா மற்றும் சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. ஆஸ்திரேலிய பொருளாதாரம் மீது தாக்குதல் நடத்தும் வகையில், அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சீன அரசு குறைத்துக்கொண்டது. மேலும் ஆஸ்திரேலிய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் சீன அரசு மிரட்டல் விடுத்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத்துறை உட்பட அனைத்து துறைகளிலும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் தகவல்களையும் திருட முயற்சி நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக பேசிய அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், சைபர் தாக்குதலுக்கு பின்னணியில் அதிநவீன அரசு ஒன்று உள்ளதாக சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சைபர் தாக்குதல் பல மாதங்களாகவே நடைபெற்று வருவதாக கூறிய அவர், சமீபகாலமாக அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார். இதனால், தங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிப்பு குறித்த முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.
இந்த சைபர் தாக்குதல் திட்டமிட்டு, மேம்பட்ட முறையில் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மோரிசன், இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தான் தொடர்புக்கொண்டு பேசியதாகவும் தெரிவித்தார். அத்துடன், இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டும் இதுபோல சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு முன்னர் அந்நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் 3 பெரிய கட்சிகளின் தகவல்களை திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அந்த சைபர் தாக்குதலை சீனாதான் நடத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போதும் சீன அரசுதான் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதேபோல சைபர் தாக்குதல் நடத்த சீனா திட்டமிட்டிருப்பதாக அண்மையில் செய்தி வெளியானது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஏடிஎம் மையங்களை செயலிழக்க வைக்க சதி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்திய எல்லையில் சீனா நேரடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ஆஸ்திரேலியா மீது பொருளாதார தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், சீன அரசு பிற நாடுகள் மீது சைபர் தாக்குதலையும் நடத்த தொடங்கியுள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.