அதிகரிக்கும் கொரோனா; பிரதமர் நாளை ஆலோசனை

கொரோனா அதிவேகமாக பரவி வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரம் அளவில் இருந்த நிலையில் திடீரென பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த சில நாட்களாக ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதால், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 4 வாரங்கள் மிகவும் முக்கியமான காலக்கட்டம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

கொரோனா பரவல் அதிகரிப்பையொட்டி ஜார்க்கண்ட மாநிலத்தில் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு 8 மணிக்கு மேல் கடைகள், உணவகங்கள், பார்களை திறந்திருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 20 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும், அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் எனவும் முதலமைச்சர் விஜய் ருபானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உணவகங்கள், பார்கள், உடற்பயிற்சி கூடங்களில் 50 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சண்டிகர், ஜெய்ப்பூர் நகரங்களிலும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுகிறது.

 

Exit mobile version