டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடைப்பணிகள் நடைபெறும் நிலையில், விவசாயிகள் வைக்கோலைத் தீ வைத்து எரிப்பதால் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது.
டெல்லியைச் சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் விளைந்துள்ள நெல், கோதுமைப் பயிர்களை அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தானியங்களை எடுத்த பின் கழிவாகும் வைக்கோலைக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தாமல் வயலிலேயே தீவைத்துக் கொளுத்துவது வழக்கமாகி விட்டது. பஞ்சாப், அரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் வைக்கோல் எரிக்கப்படுவதால் டெல்லியில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளது. அரியானா மாநிலம் குருசேத்திரத்தில் இதுபோல் பல நூறு ஏக்கர் பரப்பில் வைக்கோலைத் தீவைத்துக் கொளுத்தியதால் விடாமல் புகைமூட்டம் பரவி வருகிறது.
சுற்றியுள்ள நான்கு மாநிலங்களின் புகைமூட்டம், வாகனங்களில் இருந்து வெளியாகும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஆகியவை சேர்ந்து டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மோசமடைந்துள்ளது. புகைமூட்டத்தால் டெல்லி மக்கள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். புகைமூட்டத்துடன் பனிமூட்டமும் உள்ளதால் பார்வைப் புலப்பாட்டுத் தூரம் குறைந்துள்ளதால் வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன.