மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழக, கேரள மாநில மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரத்தில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு நீர் வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கனஅடி வரை அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 130 அடியைத் தாண்டியது. ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்கள் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
இந்தநிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 5 சென்டி மீட்டரும், தேக்கடியில் 4 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு 2 ஆயிரத்து 628 கன அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு ஆயிரத்து எழுநூறு கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.