நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 8 ஆயிரத்து 113 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணையின் மூலம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் நிரம்பி உபரிநீர் பவானி மற்றும் மாயாற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஒரேநாளில் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.