தமிழகத்தின் 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணை, தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற சிறப்புக்கு உரியது. சுதந்திரத்திற்குப் பின் 1955 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையே ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ளது.

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் மொத்த உயரம் 120 அடி கொண்டதாகும். 102 அடிகளுக்கு நீர் நிரம்பும் போது அணை நிறைந்து விட்டதாகக் கொள்ளப்படும். கடந்த 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் பவானிசாகர் அணை தொடர்ந்து 3 முறை முழுக் கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு நவம்பரில் தான் பவானிசாகர் மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பவானிசாகர் அணை தற்போது நிரம்பி வழிகிறது. இதனால் 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தவிர குடிமராமத்து பணிகளால், 35க்கும் மேற்பட்ட குளம் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் அடுத்த ஒரு வருடத்திற்கு விவசாயிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்கின்றனர் விவசாயிகள்.

Exit mobile version