மழை காரணமாக குற்றால அருவிகளில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தென்காசி, குற்றாலம், மேலகரம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் திடீரென மழை பெய்தது.
2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், குற்றாலத்தில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து அருவியில் நீர் கொட்டத் தொடங்கியது. அருவியில் சீரான அளவில் தண்ணீர் கொட்டுவதால், குளிப்பதற்கு வசதியாக இருப்பதாக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் சுற்றுலா பயணிகளின் வருகை மிக குறைவாகவே உள்ளது.