கர்நாடகாவில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர், வந்து கொண்டிருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்படுகிறது. ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர் வரத்து, படிப்படியாக உயர்ந்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 40 புள்ளி 25 அடியாக உள்ளது. அணைக்கு 7 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் சூழலில், குடிநீர் தேவைக்காக ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு மாவட்டம் மற்றும் கேரளாவில் அடுத்த 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.