கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்து மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர் மட்டம் ஒரே நாளில் ஒரு அடி அதிகரித்து உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 428 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போக குறுவை நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல், தரிமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4 ஆயிரத்து 500 கனஅடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் தமிழகத்திற்கு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து மொத்தம் 7 ஆயிரத்து 271 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இதே போல், பவானி சாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 3 நாட்களாக பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் அணைகள் நிரம்பி உபரிநீர் பவானி மற்றும் மாயாற்றில் திறக்கப்பட்டுள்ளது.