முகக்கவசங்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது ; புதியதொரு மாற்றுத் தொழிலாக உருவெடுத்துள்ளது!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, முகக்கவசங்களின் உற்பத்தியும் விற்பனையும் அதிகரித்துள்ளது. அது உலகம் முழுவதும் முகக்கவச உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை அதிகரித்து, புதியதொரு மாற்றுத் தொழிலாக உருவெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் உலக வல்லரசு நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரம், ராணுவ பலம், ஆயுத பலம் என அனைத்திலும் வளர்ந்த நாடுகளாக இருந்தாலும்… வளரும் நாடுகளாக இருந்தாலும்… வளராத நாடுகளாக இருந்தாலும், கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ள அனைத்து நாடுகளும் முதலில் நாடுவது முகக்கவசங்களைத்தான். தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், முகக்கவசங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு, வீட்டைவிட்டு வெளியில் செல்பவர்கள், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு, கடைகள் மற்றும் வியாபார நிறுவனங்கள் பொருட்கள் எதுவும் தர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. அதனால், மனிதர்கள் அணியும் ஆடைகளைப் போல் முகக்கவசமும், அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது.

முகக்கவசங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் தேவை காரணமாக, அதை தயாரிப்பவர்களும் அதிகளவில் பெருகியுள்ளனர். அதுவும், ஊரடங்கு காரணமாக அதிகமானோர் வேலை வாய்ப்புக்களை இழந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மாற்றுத் தொழிலாக முகக்கவசம் தயாரிப்பு மற்றும் விற்பனையில் இறங்கி உள்ளனர். சென்னையில் சாலையோரங்கள், சாதாரண கடைகள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும், முகக்கவசம் விற்பனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகன போக்குவரத்து மிகுந்த அனைத்து சாலைகளிலும் முகக் கவசங்கள் விற்பனை செய்பவர்களையும், அதற்கான கடைகளையும் காண முடிகிறது. இந்தத் தேவையைக் கருத்தில் கொண்ட உற்பத்தியாளர்கள், முகக்கவசத்திலும் பல புதுமைகளைப் புகுத்தி உள்ளனர். ஒருவரின் முகத் தோற்றத்திலேயே முகக்கவசம், குழந்தைகளைக் கவரும் சோட்டாபீம், பென் 10, ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திர முகக்கவசங்கள் என விதவிதமாக அவற்றைத் தயாரிக்கின்றனர். காட்டன் துணி, பனியன் துணி, நைலான் துணிகளில் இந்த வகையான முகக்கவசங்களைத் தயாரிக்கின்றனர். குறிப்பாக, துணித் தயாரிப்பு நிறுவனங்கள், தையல் கடைக்காரர்கள் இந்தக் முகக்கவசத் தயாரிப்பில் முழு வீச்சில் இறங்கி உள்ள நிலையில், எளிய மக்கள் பலரும் முகக்கவசங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். திரும்பத் திரும்பத் துவைத்து பயன்படுத்தக்கூடிய துணி முகக்கவசங்கள் இருபது ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரையிலும், என் 95 முகக்கவசங்கள் 200 ரூபாயில் இருந்து 300 ரூபாய் வரையிலும், சாதரண முகக்கவசங்கள் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக, வேலைவாய்ப்பு குறைந்துவிட்ட காரணத்தினால், தற்போது முகக்கவசங்கள் தயாரிப்பு சென்னையில் ஒரு குடிசைத் தொழில் போல் மாறி இருக்கிறது. இதன்மூலம், சாலையோரம் முகக்கவசம் விற்பவர்கள் நாளொன்றுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 500 முகக் கவசங்கள் கூட விற்பனையாகிறது என்கின்றனர் முகக்கவசம் விற்பனையாளர்கள். குறைந்தபட்சம் வாரம் இருமுறையாவது பொதுமக்கள் தங்களின் முகக்கவசங்களை மாற்றுகின்றனர். கொரோனா பரவலைத் தடுத்து உயிர் காக்கும் முகக்கவசங்கள், தற்போது பலரது வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் மாற்றுத் தொழிலாக மாறி உள்ளது.

Exit mobile version