டெல்லியில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் மாசுவை குறைக்கும் வகையில் இன்று முதல் வாகன கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள ஏராளமான மக்கள் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மூடுபனி போல காணப்படும் காற்று, தரக்குறியீட்டில் 434 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று முதல் மாசுவை குறைக்கும் வகையில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படுகின்றன.
காலை 8 மணி முதல் இந்த விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. விதிமுறையை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை நவம்பர் 15ம் தேதி வரை அமலில் இருக்கும். இதேபோல், அரசு அலுவலங்களுக்கான அலுவலக நேரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 21 அரசு துறைகளை சேர்ந்த அலுவலகங்களுக்கு காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், மற்ற 21 அலுவலகங்களுக்கு காலை 10.30 மணி முதல் 7 மணி வரையும் மாற்றம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.