வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிப்பு பொய்யான தகவல்: நிதி ஆயோக் மறுப்பு

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சரிபார்க்கப்படவில்லை என நிதி அயோக் தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து விட்டதாகவும், வேலை இல்லாதவர்கள் எண்ணிக்கை பெருகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதையடுத்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு அளிப்பதாக மோடி வாக்குறுதி அளித்தார்.

ஆனால், 5 ஆண்டுகள் ஆன நிலையில், வேலையில்லா திண்டாட்டம் தேசிய பேரழிவாக உயர்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தை சீரழித்த மோடி, வீட்டுக்கு போக வேண்டிய நேரம் வந்து விட்டதோ? என ராகுல் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் வேலை வாய்ப்பு குறித்த தகவலுக்கு நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், மறுப்பு தெரிவித்துள்ளார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சரிபார்க்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார். வேலைவாய்ப்பு தொடர்பான தரவு எதையும் அரசு வெளியிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version