கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 54 ஆயிரத்து 511 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து வரப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. அதன்படி கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 24 ஆயிரத்து 511 கனஅடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீரின் வரத்து 11 ஆயிரம் கன அடியிலிருந்து 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்தநிலையில் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். மேலும் அருவியில் குளிக்க 29வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.