மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை மெட்ரோ ரயில் தொடங்கியது முதல், இதுவரை 6 கோடியே 8 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சேவை, கடந்த 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. சில மெட்ரோ ரயில் நிலையங்களில், ஷேர் ஆட்டோ, ஷேர் டேக்சி மற்றும் மெட்ரோ சீருந்து இணைப்பு சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவைகளை, விரைவில் சென்னையிலுள்ள 32 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் துவங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கிய நாளிலிருந்து, அதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜூன் 29ம் தேதி முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை, சென்னை மெட்ரோ ரயிலில் 2 கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

இதே போல், 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரை, 3 கோடியே 23 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். மொத்தமாக, மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டதிலிருந்து, இதுவரை, 6 கோடியே 8 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exit mobile version