பால்கோட் தாக்குதலுக்கு பின் காஷ்மீர் எல்லையில் 513 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.
இதுதொடர்பாக ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாலகோட் தாக்குதலுக்கு பிறகு காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றி இருப்பதாக தெரிவித்தார். இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.