கார்த்தி சிதம்பரம் வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு!

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் முட்டுக்காட்டில் உள்ள தங்களுக்கு சொந்தமான சொத்துகளை கடந்த 2015ம் ஆண்டு அக்னி எஸ்டேட்ஸ் பவுன்டேஷன் என்ற நிறுவனத்திற்கு, 4.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால், சந்தை மதிப்பின் படி ஒரு ஏக்கர் 3 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு விற்பனை ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இந்த தொகைக்கு மட்டும் வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனால், வருமான வரிஏய்ப்பு நடந்துள்ளதாக, இருவர் மீதும் வருமான வரித்துறை 2018 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி, கார்த்தி சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனு கடந்த ஜனவரியில் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கார்த்திக் சிதம்பரமும், அவரின் மனைவியும் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Exit mobile version