தமிழகத்தில் பிரபல நகைக்கடை, ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
மதுரை தெற்குமாசி வீதி விளக்குத்தூண் அருகே செயல்பட்டுவரும் பிரபல நாச்சியார் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கடைக்குள் அதிரடியாக நுழைந்த 34 பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.
வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, வருமான வரித்துறையினர் இந்த சோதனையை மேற்கொண்டனர். கடையின் உள்ளே, ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 3 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோன்று சென்னை தியாகராய நகர் மற்றும் கோவையில் உள்ள மலபார் கோல்ட் மற்றும் நகைக்கடைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் 4 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டனர். சோதனையை முன்னிட்டு கடைகள் அடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.