வருமானம் ரூ5000, சொத்து குவித்தது 220 கோடி! இது எவ்வாறு சாத்தியமானது ? – செய்தி தொகுப்பு

ஆந்திராவில் மாதத்திற்கு 5000 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் கொண்ட ஏழைகள் 797 பேர் சுமார் 220 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது எவ்வாறு சாத்தியமானது ? இந்தத் தொகுப்பில் காணலாம்.

ஆந்திராவில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டு தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதியை தேர்ந்தெடுத்தார் அன்றைய முதல்வர் சந்திர பாபு நாயுடு. அமராவதி உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக விஜயவாடாவிற்கு அருகே சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் இதற்காக இதற்காக ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆந்திராவின் புதிய முதல்வராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின் 3 தலைநகரங்கள் என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அமராவதியில் சட்டசபை மட்டுமே இயங்கும் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி தீவிரமாக போராடி வருகிறது. மாநிலம் முழுவதும் கலவரங்களை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் நிலம் கையகப்படுத்துவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திராவில் மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வருமானமுள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்காக வெள்ளை ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. அமராவதியில் வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருக்கும் 797 பேர் சுமார் 220 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

அவர்களில் 529 பெயருக்கு பான் கார்டுகள் கூட இல்லையாம். அதாவது வருமானவரி செலுத்தாத 797 பேர் தான் 220 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை வாங்கியுள்ளனர். இந்த முறைகேட்டை கண்டுபிடித்த ஆந்திர குற்றப்புலனாய்வுத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நிலம் வாங்கியவர்களின் குறித்த விவரங்கள், நிலத்தின் அளவு, அதனுடைய  சந்தை விலை, விற்பனை பத்திரம் உள்ளிட்ட பல விவரங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கோரியுள்ளனர். இதில் அதிகமான நிலம் அமராவதி நகரின் மையப்பகுதியான துள்ளுரு என்ற இடத்திலே வாங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத் தக்கது.  இது தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள்  ஃபுல்லா ராவ், நாராயணன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊழல் புகாரில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version