திண்டுக்கல்லில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிக்கு சொந்தமான சாகர் குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த நாசர் கான் என்பவர், அமமுகவில் வர்த்தகர் அணியின் செயலாளராக உள்ளார். இவர் திண்டுக்கல் பேருந்து நிலையம், காட்டாஸ்பத்திரி, ஸ்பென்சர் காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் வணிக வளாகம், மருந்துக் கடைகளை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தனது வணிக நிறுவனங்களின் வருவாய் குறித்து உரிய கணக்கு காட்டாமலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வந்த புகாரையடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர், திடீர் சோதனை நடத்தினர். இதேபோல், அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.