உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச தேர்தலில் தனிபெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. இதனால் வரும் மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை பிரதமராக்கிவிட்டு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் பதவியை தன்வசப்படுத்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க இருவரும் மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் சரிசமமாக மக்களவைத் தொகுதிகளை பிரித்துக்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் அஜித் சிங் தலைமையிலான ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் இணைய வாய்ப்புள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15-ம் தேதி மாயாவதியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.