துருக்கியில் , 15 நூற்றாண்டுகளாக இயற்கை இடர்பாடுகளை எதிர்கொண்டு நிற்கிறது!!

துருக்கியின் அடையாளமாகவும், சர்வதேச அருங்காட்சியமாகவும் விளங்கும் பொறியியல் அதிசயம் ஹகியா சோபியா (HAGIA SOFIA). ஏராளமான இயற்கை சீற்றங்களையும், படையெடுப்புகளையும் சந்தித்தாலும், தன் இயல்பு மாறாமல் இருக்கும் ஹகியா சோபியா குறித்தும் அதன் சிறப்பு குறித்தும் இன்றைய உல்லாச உலகம் தொகுப்பில் காணலாம்…

ஹகியா சோபியா என்று அழைக்கப்படும் கட்டிடம், 6 ம் நூற்றாண்டில் ((Byzantine )) பைசாண்டின் பேரரசால் கட்டப்பட்டது. கதீட்ரல் என்ற கிறிஸ்துவ மதப் பிரிவின் வழிபாட்டுத் தலமாக விளங்கிய ஹகியா சோபியா, அன்றைய காலகட்டத்தில் CHURCH OF DIVINE WISDOM என அழைக்கப்பட்டது. பைசாண்டின் சாம்ராஜ்யத்தின் கட்டடக் கலைக்கு சான்றாக உள்ள இந்தக் கட்டிடம், (Anthemius) ஆந்தீமியஸ் மற்றும்
இசிடோர் ஆகிய புகழ்பெற்ற ரோமானியக் கட்டடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்டது. இயற்பியல், கணிதம், வடிவியல் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய இருவரும், எத்தகைய இயற்கை பேரிடரிலும் சிதையாத வண்ணம் ஹகியா சோபியாவை வடிவமைத்தனர்.

ஹகியா சோபியாவின் மையத்தில் உள்ள குவிமாடம் 105 அடி உயரம் கொண்டது. மையக் குவிமாடத்திற்கு இணையாக இரண்டு சிறிய குவிமாடங்கள் காணப்படுகின்றன. மையக் குவிமாடத்தின் கீழ் நின்று உயரே பார்ப்பவர்களுக்கு, ஒரு பள்ளத்தாக்கில் நிற்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இக்கட்டிடத்தில், 12 கண்ணாடிக் கதவுகள் இருக்கின்றன. மார்பிள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு வண்ணங்களில் மொசைக் கற்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. சூரிய வெளிச்சத்தில் வண்ணக் கண்ணாடி ஜன்னல்களில் இருந்து வெளிப்படும் வண்ண ஒளி, கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

ஹகியா சோபியா 558 ஆம் ஆண்டி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கதில் சேதமடைந்தது. அதன்பின்னர் பலமுறை நிலநடுக்கத்தினாலும் படையெடுப்புகளினாலும் பாதிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டது. 1453 ஆம் ஆண்டு துருக்கியைக் கைப்பற்றிய அரேபியர்கள், ஹகியா சோபியாவை மசூதியாக மாற்றினார். ஹதியா சோபியாவின் குவிமாடத்தில், குரான் வாசகமும், கன்னி மேரியின் உருவமும் ஒரே இடத்தில் அமைந்துள்ளதை இன்றும் காணலாம்…

1935 ஆம் ஆண்டுவரை மசூதியாக இருந்த ஹகியா சோபியா, அதன்பின் அருங்காட்சியாகமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்தக் கட்டிடம் மீண்டும் மசூதியாக செயல்படும் என துருக்கி அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார். துருக்கி அதிபரின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர், ஹதியா சோபியா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக தொடர்ந்து திகழ வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக அருங்கட்சியமாக இருந்த ஹதியா சோபியா, துருக்கியின் முடிவால் மீண்டும் உலக அரசியலின் மையப் புள்ளியாக மாறியுள்ளது. பல சாம்ராஜ்யங்களின் அடையாளமாக உள்ள ஹதியா சோபியா, மேலும் 15 நூற்றாண்டுகள் அதே பொலிவுடன் திகழ வேண்டும் என்பதே, வரலாற்று ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version