திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அங்குரார்ப் பணம் நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இதையொட்டி அங்குரார்ப் பணம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமியின் சர்வ சேனாதிபதியான விஷ்வ சேனர் மேற்கு திசையில் உள்ள வசந்த மண்டபத்திற்கு நாதஸ்வரங்கள் முழங்க கோயிலில் இருந்து ஊர்வலமாக வந்தார். பின்னர் கோயில் அர்ச்சகர்கள் சுத்தமான பகுதியில் உள்ள மண்ணை கோயிலுக்கு கொண்டு வந்து யாகசாலையில் 9 பானைகள் வைத்து நவதானியங்கள் செலுத்தி முளைகட்டும் பூஜையான அங்குரார் பணத்தை செய்தனர். அங்குரார் பணத்திற்கு சந்திரன் அதிபதியாக இருந்து சுக்ல பட்ச காலத்தில் வளரும் சந்திரனை போன்று பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் தண்ணீர் ஊற்றி நவதானியங்கள் வளர்க்கப்பட உள்ளது. இதையடுத்து கோயில் தங்க கொடிமரத்தில், காலை பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படுகிறது. இதனிடையே பிரம்மோற்சவ நாட்களில் இலவச தரிசனம் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.