ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் செயற்பொறியாளர் வீட்டில் 85 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் கமலம் நகரில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவர், பெங்களூவில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். குடும்பத்தார்கள் திருமுல்லையாயலில் வசித்து வருகின்றனர். நேற்று மாலை அவரின் மனைவி வெளியில் சென்ற நிலையில், வீட்டின் பின்கதவை உடைத்த மர்மநபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் சோதனை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையர்கள் வீட்டின் பின்புறம் மது அருந்தி விட்டு சாவகாசமாக கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.