விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையில் இருந்து 125 கன அடிநீரை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை அதன் முழு கொள்ளவான 32 அடியை எட்டியது. இந்நிலையில் விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வீடூர் அணையில் இருந்து 125 கன அடி நீரை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் உத்தரவின் படி விரைவில் வீடூர் அணை தூர்வாரப்படும் என்று உறுதியளித்தார். மேலும், வீடூர் அணை மூலம் தமிழகத்தின் 11 கிராமங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்து 200 ஏக்கர் விவசாய நிலங்களும், புதுச்சேரி மாநிலத்தில் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும் என்று அவர் தெரிவித்தார்.வீடூர் அணையில் இன்று திறக்கப்படும் நீரானது எதிர்வரும் மே மாதம் வரை 145 நாட்களுக்கு திறக்கப்படவுள்ளது. அணையைத் திறக்க நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.