கிராமத்தில் பிறந்த ஒரு பெண்ணின் உலகச் சாதனை!

இளம் வயதில் உலகச் சாதனை நிகழ்த்திய பெண் ஒருவர், பெண்களின் முன்னேற்றத்திற்காக சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். யார் அந்தப் பெண், அவரைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு

இப்போது உள்ள இளம்பெண்கள் நடனமாடுவதை வெறும் பொழுது போக்காக மட்டுமே பார்க்கின்றனர். நடனத்தைப் பொழுது போக்காக பார்க்காமல் அதில் எதாவது சாதிக்க வேண்டும் என நினைத்துள்ளார் இளம்பெண் ஒருவர். 18 வயதே ஆன பந்தனா நேபாள், நடனத்தின் மீது சிறு வயதிலேயே அதிக ஆர்வம் காட்டி வந்தார். பந்தனா கிராமத்தில் பிறந்தவர். எனவே அங்கு உள்ள மக்களுக்கு அவ்வளவாக நடனத்தைப் பற்றி எதுவும் தெரியாது. இருப்பினும் பந்தனா சோர்ந்து விடாமல் அதற்கான முயற்சிகளில் சிறிது சிறிதாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆரம்பத்தில் சில மணி நேரம் மட்டுமே அவரால் ஆட முடிந்தது.பின்னர் தொடர்ந்து ஒரு நாள் முழுக்க ஆட வேண்டும் என்று சோதனை முயற்சியை மேற்கொண்டார்.தனது நடனத்தில் ஏதேனும் சாதனை நிகழ்த்தியாக வேண்டும் என்று எண்ணிய பந்தனா தொடர்ந்து தீவிரமாக நடனமாடுவதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

நடனத்தில் சாதனை புரிய எண்ணிய பந்தனா, இதற்கு முன் யாரெல்லாம் அதிக நேரம் நடனம் ஆடி சாதனை புரிந்துள்ளனர் என தேடத் தொடங்கினார். அதில் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர் 123 மணி நேரம் 15 நிமிடங்கள் நடனம் ஆடி உலக சாதனை புரிந்திருந்தார். அவரை விட அதிக நேரம் நடனம் ஆட வேண்டும் என எண்ணிய பந்தனா இறுதியில் 126 மணி நேரம் நடனம் ஆடி உலக சாதனை படைத்தார். சிறு வயதிலேயே உலகச் சாதனை படைத்த பந்தனா, மேலும் அதிக நேரம் நடனம் ஆடி, மீண்டும் ஒரு உலக சாதனை படைக்க உள்ளார். அதற்கான தீவீர முயற்சியில் தன்னை ஈடுபடுத்தியும் வருகிறார் பந்தனா.நடனம் மட்டும் இல்லாமல் சமூக சேவையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் பந்தனா. அந்த வகையில் ஏழைப்பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவும் நோக்கத்தில் ” பந்தனா நேபாள் பவுண்டேசன்” ஒன்றைத் தொடங்கித் தன்னை சமூக சேவையிலும் ஈடுபடுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version