சென்னை, கிண்டியில் காவல் சீருடையில் ரயில்வே பெண் ஊழியரை மிரட்டிய 3 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த சுபாஷினி மாம்பலம் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்யும் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் காலையில் பணிக்கு செல்ல கிண்டி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். சுபாஷினியை பின்தொடர்ந்த, வியாசர்பாடியைச் சேர்ந்த வதனி, கொளத்தூரைச் சேர்ந்த தமிழ்செல்வி மற்றும் ஆவடியைச் சேர்ந்த முத்துலட்சுமி ஆகிய மூவரும் தங்களை காவலர்கள் போல் காட்டிக்கொண்டு, அவரின் கையைப் பிடித்து இழுத்ததாக தெரிகிறது.
இதனால் பதற்றம் அடைந்த சுபாஷினி, கூச்சலிட்டதை அடுத்து போலி காவலர்கள் அங்கிருந்து தப்பினர். இதுதொடர்பாக கிண்டி காவல் நிலையத்தில் சுபாஷினி அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், சுபாஷினி, ரயில்வே ஊழியரான ஆகாஷ் என்பவருடன் தொடர்பு இருப்பதாகவும், அதே நபருடன் வதனியும் தொடர்பில் இருப்பதாகவும் தெரிகிறது. இதனால் சுபாஷினியை மிரட்டுவதற்காகவே வதனி இதுபோன்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவலர் சீருடையில் மிரட்டிய மூன்று பெண்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.