திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் தொடங்க உள்ளதை முன்னிட்டு, அரசு ரோஜா தோட்டத்தில் ரோஜா செடிகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் கோடை சீசனில், உள்ளூர் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்குவர். இதனால், சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம், அரசு ரோஜா தோட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜா செடிகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் பரப்பளவில், ஆயிரத்து 500 வகைகளில் பல வண்ண ரோஜா செடிகளை ஊழியர்கள் நட்டு வருகின்றனர். மேலும் ரோஜா செடிகளுக்கு பூஞ்சை தடுப்பு மருந்து, மற்றும் இயற்கை உரங்கள் வைக்கும் பணி தொடங்கியுள்ளது. அடுத்த 45 நாட்களில் இந்த ரோஜா செடிகளில் மலர்கள் பூக்கத் துவங்கிவிடும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது