ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக நடத்தப்படும் எனவும், டிசம்பர் 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்துவதற்கான தேதியை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார். நவம்பர் 30, டிசம்பர் 7, 12, 16, 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார். டிசம்பர் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் சுனில் அரோரா தெரிவித்தார்.