உள் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 4 மடங்கு வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிவருவதால், தங்களது உடல்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக பழச்சாறு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு ஒருசில இடங்களில் இயல்பை விட 2 அல்லது 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தொலை தூர சலனங்களால், தென் தமிழக கடலோர மாவட்டத்தில் நாளை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலில் வழக்கத்தை விட 2 மீட்டருக்கு அலைகள் உயர்ந்து காணப்படும் என்பதால், மீன்பிடிக்க பாதுகாப்பாக செல்லுமாறு மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.