நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்
சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உதித்சூர்யா மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்த தேனி மாவட்ட காவல்துறையினர் தலைமறைவான அவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்ட நிலையில் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை திருப்பதியில் கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். சிபிசிஐடி விசாரணையில் மகனை மருத்துவராக்க ஆள்மாறாட்டம் செய்ததை உதித்சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரையும் சிபிசிஐடி காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் மேலும் 5 மாணவர்கள் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், மும்பையைச் சேர்ந்த கும்பல் ஆள்மாறாட்டத்தில் பெரும்பங்கு வகித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த வழக்கு பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.