நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்பட்ட மாணவன் இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்..
மாணவன் இர்பான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி சேர்ந்து படிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் மருத்துவனை நடத்தி வரும் இர்பானின் தந்தை முகமது ஷபியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். முகமது ஷபியின் சகோதரர்கள் 6 பேரும் மருத்துவர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், தனது மகனை எப்படியாவது மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது தந்தை ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது நடவடிக்கைக்கு பயந்து மாணவன் இர்பான், மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாணவன் இர்பான் இன்று சரணடைந்தார். அவரை 9ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.