மசூதியில், இந்து மணமக்களுக்கு திருமணம்

கேரளாவில் உள்ள மசூதியில், இந்துப் பெண் ஒருவருக்கு, இந்து சமய முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. சமய நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த இந்த நிகழ்வு பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள சேரவல்லியில், முஸ்லிம் ஜமாத் கமிட்டி இயங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஜமாத் கமிட்டிக்கு, பிந்து என்ற பெண் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

அதில், தனது மகளின் திருமணத்துக்கு ஜமாத் கமிட்டி உதவ வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அதைப் பரிசீலித்த சேரவல்லி முஸ்லிம் ஜமாத் கமிட்டி, பிந்துவின் மகள் திருமணத்தை நடத்திக் கொடுக்க முடிவு செய்தது.  அதன்படி, நேற்று மதியம் 12.19 மணிக்கு, பிந்துவின் மகள் அஞ்சுவுக்கும் சசிதரன் என்பவரின் மகன் சரத்துக்கும் திருமணம் நடைபெற்றது.

முஸ்லிம் ஜமாத் கமிட்டி, அஞ்சுவின் திருமணத்தை மசூதியில் வைத்து நடத்திக் கொடுத்தாலும், அதை இந்து முறைப்படியே நடத்திக் கொடுத்தது. மேலும், 10 சவரன் நகையும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணமும் ஜமாத் கமிட்டி சார்பில் அஞ்சுவுக்குக் கொடுக்கப்பட்டது.

சமூக நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்துப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும், தனது ட்விட்டர் பக்கத்தில், சேரவல்லி முஸ்லிம் ஜமாத் கமிட்டியின் இந்த செயலைப் பாராட்டி உள்ளார்.

Exit mobile version