ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம்: பக்தர்கள் அதிர்ச்சி

வரலாற்று சிறப்பு மிக்க சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில், ஆகமவிதிகளையும், காலம் காலமாக இருந்த நடைமுறைகளையும் மீறி தொழிலதிபர்கள் இல்ல திருமண விழா ஆடம்பரமாக நடந்த விவகாரத்தில் தீட்சிதர் பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில், பல்வேறு சிறப்புகளை கொண்டது. கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் “ராஜ சபை” என்று அழைக்கப்படுகிறது. புனிதமான இடம் என்பதால் ஆனித்திருமஞ்சனம், ஆருத்ரா தரிசனம் போன்ற நிகழ்ச்சிகளை தவிர மற்ற நிகழ்ச்சிகள் ஆயிரங்கால் மண்டபத்தில் நடத்தப்படுவது இல்லை.

வழக்கமாக சிதம்பரம் நடராஜர் கோயிலின் வடக்குக் கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் சந்நிதியில்தான் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், சிவகாசியை சேர்ந்த பட்டாசு ஆலை அதிபரின் இல்ல திருமண விழா ஆயிரங்கால் மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்றுள்ளது. இதற்காக ஆயிரங்கால் மண்டபம் மின் விளக்குகள், மலர்த் தோரணங்கள், வண்ண சீலைகளால் நட்சத்திர விடுதி போன்று அலங்கரித்தனர்.

திருமணம் நடைபெற்ற இடத்திற்கு அருகே விருந்தினர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது. புனிதமாக கருதப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் தொழிலதிபர்கள் இல்ல திருமணம் ஆடம்பரமாக நடந்தை பார்த்த பக்தர்கள், இது நடராஜர் கோவிலா..? அல்லது நட்சத்திர விடுதியா..? என கேள்வி எழுப்பினர்.

ஆயிரங்கால் மண்டபத்தில் சோழர்கள் மட்டும் முடிசூடுவது வழக்கம். கிருபானந்த வாரியாரின் ஆன்மீக சொற்பொழிவுக்கே ஆயிரங்கால் மண்டபத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தொழிலதிபர்களின் இல்ல திருமண விழாவிற்கு மட்டும் அனுமதி வழங்கியது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சோழர்கள் நிர்வாகத்தில் உலக புகழ் பெற்று விளங்கிய சிதம்பரம் நடராஜர் கோவிலை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவதை தடுக்க அந்த கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம் சர்ச்சையை கிளம்பிய நிலையில், அதற்கு அனுமதி அளித்த தீட்சிதர் பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த தீட்சிதர்கள் ஐயப்பன், நவமணி ஆகியோர், ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த ஆடம்பர திருமணம் தங்களுக்கே தெரியாமல் நடந்ததாக மழுப்பலான பதிலை அளித்தனர். புனிதமாக விளங்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடந்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்த தீட்சிதர்கள், சில தவறுகள் நடந்துள்ளதாகவும், அதற்காக பக்தர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறினர். இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் உறுதியளித்தனர்.

ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடந்தது தங்களுக்கே தெரியாமல் நடந்ததாக தீட்சிதர்கள் கூறுவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள பக்தர்கள், சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு கையகப்படுத்தி பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

Exit mobile version