விவசாயி ஒருவர் விருதாச்சலம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள, தனது குறைந்த அளவிலான நிலத்தில், புடலங்காய் சாகுபடி செய்து, மாதம் ஒரு லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறார். அவரால் எப்படி இதை சாதிக்க முடிந்தது?
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரின் மையப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் நகரில், செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர், தன் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள 30 சென்ட் இடத்தில், தொழு உரங்களை பயன்படுத்தி தோட்ட பயிரான புடலங்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக, 15 ஆயிரம் மட்டுமே செலவு செய்து, புடலங்காய் கொடிகள் படரும் வகையில் பந்தல் ஒன்று அமைத்துள்ளதாகவும், விதை விதைக்கப்பட்டதிலிருந்து 30 நாட்க்களில் புடலங்காய் விளைவதாகவும் விவசாயி செந்தில் முருகன் கூறுகிறார்.
மேலும், புடலங்காய் சாகுபடியில், எவ்வித ரசாயன பொருட்கள் மற்றும் தெளிப்பான்களையும் பயன்படுத்தாமல் ஆடு, மாடுகளின் கழிவுகளைக் கொண்ட தொழு உரத்தினை மட்டுமே பயன்படுத்துவதால், நோய் தாக்குதல் இல்லாமல், விளைச்சல் நன்றாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் புடலங்காய்களை, அக்கம் பக்கத்தினரும், வியாபாரிகளும் விளை நிலத்திற்கே நேரில் வந்து ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
இது பற்றி பேசிய விவசாயி செந்தில் முருகன், தனது தோட்டத்தில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 500 முதல் 1000 கிலோ வரை அறுவடை செய்யும் புடலங்காய்களை, 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை, விற்பனை செய்வதாகவும் கூறுகிறார்.
மேலும், குறைந்த செலவில், அதிக விளைச்சல் தரும் புடலங்காய் சாகுபடியினால் தனக்கு மாதம் ஒரு லட்சம் வரை லாபம் கிடைப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்…