உள்ளாட்சித் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க அதிமுக வேண்டுகோள்

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் அமைதிப் பூங்காவாகவும், சட்டம் ஒழுங்கு சிறப்புடன் அமல்படுத்தப்படும் மாநிலமாகவும் திகழ்வதற்குக் காரணம், மக்களின் மனம் அறிந்து, தேவை அறிந்து, மக்களுக்குப் பணிவுடன் பணியாற்றும் அதிமுக ஆட்சிமுறைதான் எனக் குறிப்பிட்டுள்ளனர். கட்டப் பஞ்சாயத்து, அடியாட்களை வைத்து நடத்தும் அரசியல் அராஜகம், நில அபகரிப்பு, ஏழை எளிய மக்கள் மீது தாக்குதல், தாய்க்குலத்தைத் தரக் குறைவாக நடத்துதல் போன்ற அருவருக்கத்தக்க அரசியல் அதிமுகவால் அடியோடு வேரறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாகத் தூர்வாரப்படாமல் இருந்த நீர்நிலைகளைக் குடிமராமத்து திட்டத்தின் கீழ், விவசாய சங்கங்கள் மூலமாகச் சீரமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. கிராமப்புற வளர்ச்சிக்காக அதிமுக அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு அவரவர் சின்னங்களிலும் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version