கர்நாடகத்தில் சபாநாயகரால் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட 15 பேர் பாஜகவில் இணைந்த அன்றே, அவர்களில் 13 பேரை இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களாக பாஜக அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 17 பேர் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்துக் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சியமைத்தது. அதே நேரத்தில் சபாநாயகர், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 17 பேரையும் தகுதி நீக்கம் செய்ததுடன், சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் தேர்தலில் போட்டியிடத் தடை விதித்தார். பதவி நீக்கத்தை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், பதவி நீக்கம் செல்லும் எனவும், 17 பேரும் தேர்தலில் போட்டியிடத் தடை இல்லை எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 பேர் இன்று முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அவ்வாறு இணைந்த சற்று நேரத்தில் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களில் 13 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.