சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிப்பு

சபரிமலை காட்டில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கேரளாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தின.

கோவில் நடை திறக்கப்பட்ட போது, கோவிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் அரசு இந்த விவகாரத்தில் பின்வாங்கியதால் நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், சபரிமலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் ஐயப்ப பக்தர் ஒருவரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் பந்தளத்தைச் சேர்ந்த சிவதாசன் என்பது தெரியவந்துள்ளது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் நடத்திய தடியடியில் தான் ஐயப்ப பக்தர் சிவதாசன் கொல்லப்பட்டதாக மாநில பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து பத்தனம்திட்டாவில் முழு அடைப்புக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version