வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது.
தொடர்ந்து தடுமாற்றுத்துடன் ஆடி வந்த வங்கதேச அணி ரன் குவிக்க முடியாமல் தவித்தது. இறுதியில் வங்கதேச அணி தனது முதல் இன்னிங்சில் 106 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் இஷாந்த் சர்மா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷமி 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மாயங்க் அகர்வால் 21 ரன்களிலும், ரோகித் சர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி மற்றும் புஜரா ஜோடி ரன்குவிப்பில் ஈடுப்பட்டது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
புஜரா 55 ரன்கள் எடுத்திருந்த போது ஹூசைன் பந்துவீச்சில் அவுட் ஆனார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கேப்டன் விராட் கோலி 59 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.