தேங்காய் சிரட்டையில் இருந்து மதிப்புக்கூட்டப்பொருள் தயாரிப்பு

தேங்காய் சிரட்டையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்து லாபம் ஈட்டி வருகிறார் பட்டதாரி பெண் ஒருவர், அந்த பெண் யார் அவரைப்பற்றிய ஒரு செய்தி தொகுப்பு

கோவை மாவட்டம் கருப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாலட்சுமி. பட்டதாரி பெண்ணான இவர் கிணத்துக்கடவு அடுத்துள்ள கோடங்கிபாளையம் கிராமத்தில் சிறிய அளவிலான தொழிற்சாலை அமைத்து அதனை நடத்தி வருகிறார்.

தேங்காய் சிரட்டையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான டீ மற்றும் ஐஸ் கப், ஓவல், அகப்பை, மெழுகுவர்த்தி ஸ்டாண்ட் உள்ளிட்ட 37 பொருட்களை எவ்வித ரசாயனமும் இல்லாமல் முழுவதும் இயற்கை முறையில் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் பொருட்கள் இந்தியா மட்டுமல்லாமல் ரஷ்யா, ஜப்பான், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தேங்காயை நேரடியாக விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கி அதனை இயந்திரத்தில் அறுத்து அதிலுள்ள பருப்புகளை எடுத்து உலர வைக்கிறார். அதன்பின் சிரட்டைகளை தனியாக நீரில் ஊறவைத்து அதன் மேல் உள்ள நார்களை முழுவதுமாக நீக்குகிறார். பின்னர் பிரஷ் பயன்படுத்தி சிரட்டையின் வெளிப்பகுதி மற்றும் உட்பகுதி முழுவதுமாய் சுத்தம் செய்து மெருகூட்டப்படுகிறது.

இவ்வாறு மெருகூட்டப்பட்ட பொருட்கள் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. தேங்காயை நன்கு உலர வைத்து விற்பனை செய்வதன் மூலமும் கூடுதல் வருமானம் ஈட்டி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்

இந்த பொருட்கள் இயற்கைக்கு எதிரானது இல்லை எனவே இந்த பொருட்களை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் அவை மண்ணோடு மண்ணாக மக்கக் கூடியவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராது என பட்டதாரி பெண்ணான ராதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version