வடதமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால், வடதமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் காற்றுடன் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெறுவதாகவும், இது தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது.

சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே ஆயிரத்து 090 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டிருக்கும் தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. புயல் சின்னம் ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றாலும், வடதமிழக கடலோரத்தை ஒட்டி பயணிப்பதால், இன்றும் நாளையும் பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து, ஆந்திர கடலோர பகுதிகளான ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே 17-ம் தேதி கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version